Wednesday, December 19, 2012

கடவுள்

கடவுள் என்பது அழகு. அது இன்னிசை.
அது ஒழுங்கு.
அது அன்பு.

கடவுள் ஒரு ஜீவனல்ல.
அனைத்து ஜீவன்களின் தாயாகிய அஜீவன்.
அந்தக் கடவுளை நாம் வழிபடத் தேவையில்லை,
வணங்குவதும் அவசியமில்லை.

கடவுள் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்ற வண்ணம் அதனை நமது ஒவ்வொரு மூச்சிலும் ஈடுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கடவுளுக்கு மனித அடைமொழியை கொடுக்கின்றனர்.
அன்பானவன் என்று உருகி நிற்கின்றனர். அனைத்தும் அறிந்தவன் என சிலாகிக்கிறார்கள். அதிபுத்திசாலி என அதிசயப்படுகிறார்கள். வானளாவியவன் என மலைத்து நிற்கிறார்கள்.

இப்படி மனிதனுக்கான அனைத்து அடைமொழிகளையும் கடவுளுக்கு, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட கடவுளுக்கு சூட்டுகிறார்கள்.

அஜீவனான கடவுளுக்கு அடைமொழி எதற்கு?

கடவுள் அன்பானதுமில்லை, கொடூரமானதுமில்லை.

கடவுள் தந்தையுமில்லை,
தாயுமில்லை,
எஜமானனுமில்லை,
அடக்கியாளும் அதிகாரியுமில்லை.

கடவுளை படைப்பாளி என்றும் சொல்லமுடியாது.
ஏனெனில் படைப்பு என்பது ஒரு செயல்.
எந்த ஒரு செயலும் நடக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு நேரம் (time) தேவைதானே!
கடவுள் நேரத்தைக் கடந்தது, எனவே படைத்தல் எனும் செயல் நடக்க சாத்தியமில்லை.

கடவுள் 'தேவை' யைக் கடந்தது என்பதை உணராமல் நாம் கடவுளுக்கு சேவை செய்வதாய் பாசாங்கு செய்கிறோம்.
பசி அறியாத, தாகம் கொள்ளாத கடவுளுக்கு நாம் ஏன் பரிமாற வேண்டும் ?!

இயற்கையின் விதிகள்தாம் கடவுள் எனும்போது, விதிகளை கடைபிடிக்காமல் அதை வணங்கி நிற்பதால் மட்டும் யாது பயன்?
கடவுளைப் புரிந்து கொள்வதும், அதன் வழி நடப்பதும்தானே பயன் அளிக்கும்.

'உண்மை' யை நோக்கிச் செல்ல 'இதுதான் பாதை' என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமிருக்கிறதா? உண்மையைத் தேடிச் செல்ல எங்கும் செல்ல வேண்டியதுமில்லை; யாரையும் பின்பற்றிச் செல்லவும் தேவையில்லை.

எங்கெங்கு காணினும் தகதகக்கும் சூரியனைக் காண பாதை ஏதும் உண்டா? நம்மில் உறைந்திருக்கும் கடவுளைக் காண வெளியில் எதற்கு பாதை? தன்னைக் கடவுளின் பிரதிநிதி என்றும், தூதர் என்றும், ஏஜெண்ட் என்றும் சொல்லிக் கொள்பவர்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்?

கடவுள் மூன்றாம் மனிதர் மூலமாக செய்திகள் எதைவும் அனுப்புவதற்கான சாத்தியமில்லை. ஏனெனில் கடவுளின் செய்திகள்தாம் நம்மை சுற்றி பரந்துபட்டிருக்கிறதே!
மலைகளில், மரங்களில், கடலில், மீன்களில், நம் சுவாசத்தில்,ஒவ்வொரு அணுவிலும் பிரபஞ்சமாய் விரிந்து கிடக்கிறது கடவுள் எனும் மாசக்தி. மழலையில் கடவுள்,
மனிதனில் கடவுள்,
நாமே கடவுளின் மகத்தான செய்திதான்.

கடவுள் சொரூபியும் அல்ல,
ஜீவனும் அல்ல, பொருளும் அல்ல.
கடவுளுக்கு என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ அல்லது உலகைப் பற்றியோ உணர்தல் ஏதுமில்லை.
அதனால் நம்மைப்பற்றிய கவலையும் அதற்கில்லை. அது பேரழிவை கொடுப்பதுமில்லை, அழிவிலிருந்து நம்மை காப்பதுமில்லை.
அது சட்டதிட்டமாக, விதிகளாக மட்டுமே நம்மிடம் பரவி இருக்கிறது.
விதிகளை கடைபிடித்தால் மட்டுமே வாழ்வு சிறக்கிறது.

கடவுள் யாரையும் தண்டிப்பதுமில்லை, வெகுமதியையோ அல்லது பரிசையோ அளிப்பதும் இல்லை.
அச்செயல்களை நாமேதான் செய்கிறோம், விதிகளை மீறுவது மூலமாக தண்டனை பெறுகிறோம், அல்லது கடைபிடிப்பதன் மூலமாக பயன் பெறுகிறோம்.

தீதும் நன்றும் கடவுள் தர வாரா.
தீக்குள் விரலை வைத்தால் அது சுடுகிறது, அது தீ நமக்குத் தரும் தண்டனையாகாது. சுடுபது தீயின் விதி, அவ்வளவே.

விதிகளை உடைத்த அடுத்த கணமே அழிவு நிகழ்ந்து விடுகிறது.

கடவுள் என்பது எல்லாமே,
கடவுள் என்பது நிஜம்,
கடவுள் என்பது நிரந்தரம்.
கடவுள் என்பது நித்தியம். மற்றவை எல்லாமே தற்செயல்.
அவை யாவும் அநித்தியம்.
அழிந்து போகின்றவை.

ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரையும் கடவுள் அரவணைக்கிறது.
ஒரு கணம் கூட அதனிடமிருந்து நாம் தப்பிக்க இயலாது. நாம் கடவுளாகிய சட்டத்தை அல்லது விதிகளை மீறிய அக்கணமே நாம் இல்லை என்று ஆகிவிடுகிறோம். ஏனெனில் கடவுள் விதிகளை இயற்றியவரில்லை, விதிகளேதான் கடவுள். நம் உடம்பின் ஒவ்வொரு செல்லும், அணுவும் கடவுளின் விதிகளே!

இன்று மனித இனம் கடவுளை அறியும் முயற்சியில் வெகு தூரம் வந்திருக்கிறது. நமக்கு இன்னும் எதுவும் முழுமையாகப் புரியவில்லை என்பது நிஜம். அது நமக்கு நன்றாகவே புரிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் நிறைய நம்பிக்கைகளை வைத்திருந்தார்கள். அவர்களது அறிவு ஓரு எல்லையில் அடங்கிக் கிடந்தது. கிரகங்கள், நட்சத்திரங்கள், பூதங்கள்,பிசாசுகள், தேவதைகள், வானவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள், ஆண் கடவுள், பெண் கடவுள், குழந்தை கடவுள், ஒரே ஒரு கடவுள், ஏக இறைவன், ஏகப்பட்ட இறைவன் என்று பலவிதமான நம்பிக்கைகள்.

சில கடவுளர்கள் அன்பே உருவானவர்கள். நரகத்தின் நெருப்பு பற்றி பயமுறுத்தும் கடவுளும் உண்டு. தன்னை மட்டும் வணங்கினால் நித்திய சுகமளிக்க வாக்கு தரும் கடவுள் உண்டு. இவை அனைத்தும் மனித மனத்தின் அதீத கற்பனைகள்.

அறிவியல் அறிமுகமாகாத காலங்களில் அவை நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால், அறிவியல் ஆட்சி செய்யும் காலமிது.
மிகப்பெரிய சிந்தைனையாளர்கள் அனைவரும் இப்பிரபஞ்சத்தை இயக்கும் பௌதீக விதிகளைத்தான் கடவுள் என்று கருதினார்கள், கருதுகிறார்கள்.
அறிவியல் வளர ,மூளைத்திறன் வளர கடவுள் பற்றிய புரிந்துணர்வும் பரிணமித்து வளர்கிறது.
-----------------------------------------------------------------------------------------
சிந்தனையாளர் பெர்னாட் ஷா இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறார்.
"All great truths begin as blasphemies"
எல்லா பெரிய உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் துவக்கத்தில் கடவுள் நிந்தனை என்றே கருதப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------
அமெரிக்க வானியல் வல்லுநர் கார்ல் சேகன் (Carl Sagan) பிரபஞ்ச விதிகளை கடவுளாக சுவீகரிக்கிறார்.

"The idea that God is an oversized white male with a flowing beard who sits in the sky and tallies the fall of every sparrow is ludicrous. But if by 'God' one means the set of physical laws that govern the universe, then clearly there is such a God. This God is emotionally unsatisfying... it does not make much sense to pray to the law of gravity."


விழும் ஊர்க்குருவிகளை வானத்தில் அமர்ந்த வண்ணம் கணக்கெடுக்கும் உடல் பருத்த, தாடி தவழும் ஆண்தான் கடவுள் என்ற எண்ணமே நகைப்பிற்கிடமானது.

பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பௌதீக விதிகள்தான் "கடவுள்" என்று அர்த்தப்படுத்தப் பட்டால், அப்படியொரு கடவுள் நிச்சயமுண்டு. உணர்வுப்பூர்வமாக திருப்திப் படுத்த வேண்டிய அவசியமற்ற கடவுள் இவர்.
புவிஈர்ப்பு விதியாகிய g=980 cm/ sec.sec ஐ தொழுவதில் அர்த்தமிருக்கிறதா?
------------------------------------------------------------------------------------------------


அதிகாரப் பூர்வ கண்டிபிடிப்புகள் 1093 க்கு சொந்தக்காரரான அமெரிக்க அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் தனிமனித கடவுளிருப்பதையோ, அந்த கடவுள் தனிமனித வாழ்வை நிர்ணயிப்பதற்கான ஆதாரத்தையோ அல்லது சொர்க நரகங்கள் பற்றிய தேற்றங்களுக்கான அறிவியல் நிரூபணத்தையோ, என் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எந்த சோதனைக் கூடத்திலும் காணமுடிந்ததில்லை என்கிறார்.


"I have never seen the slightest scientific proof of the religious theories of heaven and hell, of future life for individuals, or of a personal God. [Thomas Alva Edison, Columbian Magazine] "

-------------------------------------------------------------------------------------------------
20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இந்த அழகிய பிரபஞ்சத்தின் ஒழுங்கான இணக்கத்தில் தன்னை வெளிபடுத்தும் ஸ்பினோசா கடவுளைதான் நம்புகிறேன்; மனிதப் பிறவிகளின் தலைவிதியைப் பற்றியும், அவைகளின் செயல்களைப் பற்றியும் கவலை கொள்ளும் கடவுளை அல்ல என்கிறார்.

“I believe in Spinoza's God who reveals himself in the orderly harmony of what exists, not in a God who concerns himself with fates and actions of human beings.”

-----------------------------------------------------------------------------------------------