Wednesday, May 12, 2010

6. உயிரின் ஊற்றுக்கண்

'பரிணாமக் கொள்கை' யை அது ஓர் 'உண்மை' யே (FACT) என ஐயமின்றி நிறுவி, அதற்கான ஆதாரத்தை தரும் அறிவியல் கோட்பாடுகள் பின்வரும் பெயர்களை உடையன.

1. Systematics - தாவரவியல், விலங்கியல் இவைகளின் தொகுதியியல்
2. Geopaleontology - புதைபடிமவியல்
3. Biogeography - உயிரின் வாழ்விடவியல்
4. Biochemistry - ஒப்பீட்டு உயிர் வேதியல்
5. Serology - சீரவியல், குருதி நிணநீரியல்
6. Parasitology - ஒட்டிண்ணியியல்
7. Morphology - உருவியல்
8. Immunology - தடுப்புத்திறனியல்
9. Genetics - மரபியல்
10.Embryology - கருவியல்
11.Psychology - உளவியல்
12.Ethology - நடத்தையியல்

இந்த கோட்பாடுகள் தரும் ஆதாரம் ஒரே ஒரு திசையை நோக்கித்தான் கை காட்டுகிறது.
அது...

*மனித இனம் மற்ற உயிரினங்களைப் போன்று பரிணாம வளர்ச்சியின் காரணத்தினால் விளைந்த இனமே.
*மனிதன் என்பவன் மனிதக் குரங்கினம் போன்ற மூதாதையரின் வழித்தோன்றலே.
*மனிதனை 'சிறப்பு மிக்க ஒரு படைப்பு' (special creation) என்று கருதுவது கற்பனையே.


தற்கால அறிவியல் உலகு, 'மனித இனம்' பரிணமித்து, இன்றைய நிலையை எட்டிப்பிடித்திருக்கும் வரிசைக் கிரமத்தை அடையாளப்படுத்தும் போது,

.மர மூஞ்சூறு - tree shrews
.வானரம் (ஒரங்குட்டன்) - lemurs
.தேவாங்கு - lorises
.குரங்கு - monkeys
.மனிதக்குரங்கு - apes

என்ற நிலைகளை (order primates) வரிசைப் படுத்துகிறது.
ஆதலினால் குரங்கினம், மனிதக்குரங்கினம் மட்டுமின்றி வானர இனமும், மரமூஞ்சூறு இனமும் கூட மனிதனின் தூரத்து சொந்த பந்தங்களாகின்றன.
நரம்பு மணடல இயங்கியல் வல்லுநர் (neurophysiologist) JZ Young (1907-1997)
" உணர்ந்துகொள்ள கடினமான ஒர் செய்தி என்னவென்றால் - நமது பாரம்பரியத்தை நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் பின்னோக்கினால், 'தந்தை-மகன்' என்கிற உறவு மரமூஞ்சூறுகள் மட்டுமின்றி 'ந்யூட்' அல்லது 'சாலமண்டர்' போன்ற உயிரினம், மீன் இனம் மற்றும் 'கடல் அல்லி' ஆகிய இனங்களுடன் கூட தொடர்கிறது." என்ற கருத்தை தனது
"The Life of Vertebrates" போன்ற நூல்களில் சொல்லியிருக்கிறார்.

இந்த பூவுலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் முடிந்து, அதனைத் தொடர்ந்து
ஏறக்குறைய ஒரு பில்லியன் ஆண்டைக் கடந்து வேதியல் பரிணாமத்தின் (chemical evolution) விளைவாக 'உயிர்' (life) முதன் முறையாக இவ்வுலகில் எழுந்தருளி இருக்கக்கூடும் என்று அறிவியல் உலகம் கருதுகிறது. ஒபரின் (OPARIN) (1938) எனும் ரஷ்ய விஞ்ஞானி "உயிரின் தொடக்கம்" குறித்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரை 20 ம் நூற்றாண்டின் டார்வின் என அழைப்பர்."The Origin of Life" என்ற தமது நூலில், அவர் தொடக்க கால பூமி - - புறவெளி கதிரியக்கம் (outer space radiation) மற்றும் புவி மூலமுதல் சக்தியின் (terrestrial energy) எதிர்வினை விளைவு - ஆகிய இவைகளின் ஆளுகைக்கு உள்ளாகிய வேதியல் மூலகங்களை (chemical elements) தன்னகத்தே கொண்டிருந்தது என்கிற வாதத்தை வைத்தார்.
ஒபரினின் காலத்தை ஒட்டி, அறிவியலார் மில்லர், பாக்ஸ், பொன்னம்பெருமா ஆகியோர் ஆய்வகத்தில் கரிமமில்லாக் கூட்டுப்பொருளிருந்து (inorganic compound) கரிமக் கூட்டுப்பொருளை (organic compound) உருவாக்கியதில் வெற்றி கண்டனர்.
பெரும்பாலும் சரியாகத்தான் இருகின்றன என ஆய்ந்து ஒப்புக்கொள்ளபட்ட கருத்தாக்கங்கள் சிலவற்றை அவர் உருவாக்கித் தந்துள்ளார். அவைகளைக் கூர்ந்து நோக்கி, திறந்த மனதுடன் புரிந்துகொள்ளும் போது நம் பிறந்த வீடு , வளர்ந்த ஊர், வாழும் சமூகம் இவைகளின் தாக்கத்தால் நிறுவனப்பட்டு நம்மில் உறைந்து நின்று நம்மையே ஆட்டுவிக்கும் சில மாயைகள் விலகக்கூடுமா?

கருத்தாக்கம்-1

வாழும் உயிரினம் (organism), உயிரற்ற ஜடப்பொருள் (matter) இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவுமில்லை.
உயிரின் சிறப்பியல்புகளாகக் கருதப்படும் 'உருவமெடுக்கை' (manifestation), மற்றும் 'பண்புகள்' (properties) இவைகளின் சிக்கலான இணைவுப் பொருத்தம்தான் 'பொருளின்' (matter) பரிணாமச் செயல்முறையாக முகிழ்ந்து, பின்னர் 'உயிராக' (life) மலர்ந்தருளியிருக்க வேண்டும்.

கருத்தாக்கம்-2

ஜூபிடர் மற்றும் பிற பெருங்கோள்களின் வளிமண்டலத்தில் சமீப கண்டுபிடிப்பாகக் காணக்கிடைத்த 'மீதேன்' இருப்பின் காரணத்தினால், ஓபரின் சில எடுகோள்களை முன் வைத்தார். அதாவது நாம் வாழும் பூமி தன் பச்சிளம் பருவத்தில் மீதேன், அமோனியா, ஹைட்ரஜன் மற்றும் ஆவி வடிவ நீர் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட மிக வலிமை வாய்ந்த 'reducing environment' - ஐ பெற்றிருந்தது. அவைகளே 'உயிர்' பரிணமிக்க மூலபொருட்களாயின.

கருத்தாக்கம்-3

தொடக்க நிலையில் வெறும் வேதியல் கரிமப்பொருட்களின் கரைசல்களே (solutions of organic substances) உருப்பெற்றன. அந்தக் கரைசல்களின் நடத்தையையும், தன்மையையும் அவற்றின் அணுக்கூறுகளும் (atoms), மூலக்கூறு கூட்டமைப்புகளுமே (molecular structures) வழி நடத்தின. ஆனால் படிப்படியான வளர்ச்சி மற்றும் வேதியியல் மூலக்கூற்றுச்சிக்கலின் (complexity) விளைவாக புதிய குணயியல்புகள் வெளிப்பட்டு, சிக்கலற்ற அந்த கரிம வேதியல் (simple organic chemical) உறவின்பால் புதிய வேதியியல் கூழ்நிலை சீர்மை (colloidal-chemical order) பொருத்தி அமைக்கப்பட்டது. இப்படி உருவாகும் புதிய குணயியல்புகளை மூலக்கூறுகளின் இடப்பகிர்வு மற்றும் பரஸ்பர உறவு ஆகியவைகளே தீர்மானிக்கின்றன.

கருத்தாக்கம்-4

இந்த செயல்முறையில் 'உயிரிய ஒழுங்கு வரிசை' முன்னிலை பெற்றுவிடுகிறது. இன்றைய உயிர் பொருட்களின் சிறப்பியல்புகளான போராட்டம், வளர்ச்சி வேகம், தக்கவைக்கும் வாழ்க்கைப்போர் இறுதியாக இயற்கைத் தெரிவு (natural selection) ஆகிய இவைகள்தாம் பொருள் அமைப்பு வடிவத்தை (material organization) தீர்மானிக்கின்றன,

அடிப்படை வேதியல் கரிம சேர்மங்கள் (basic organic chemicals)என்ற நிலையிலிருந்து எவ்வாறு நுண்மையான பவுதிக ஒழுங்கமைப்பாக உருமாற்றம் பெற்று, 'முன்னோடி உயிரணு' வின்( precursers of cells) மூல ஆதியான 'உயிரி'(living things) உருவாகியிருக்கக் கூடும் என்பதை கோடிட்டுக் காட்டினார் ஓபரா.

தொடர் ஒளிவேதிம் நடவடிக்கைகளின் (photochemical activity) காரணத்தால் கரிமமில்லா கலவைகள் (inorganic mixtures) அனைத்தும், புரத மூலக்கூறுகளின் (protein molecules) கட்டுமான செங்கற்களான அமினோ அமிலங்கள் (amino acid) உட்பட, கரிம சேர்மங்களாக (organic compounds) மாறும் இயற்கை விந்தை நடந்தேறுகிறது. காலவேகத்தாலும், வேதியல் தெரிவின் (chemical evolution) விளைவாலும் 'கரிம கட்டுமானங்கள்' (organic systems) நிலைத்தன்மை (stability) மற்றும் சிக்கல்தன்மை (complexity) யின் அதிகரிப்பால் முன்னோடி உயிரணுக்களாக (precursers) பரிமாணம் எடுத்தன.
பின்னர் ஜேம்ஸ் வாட்சன் (James Watson), ப்ரான்சிஸ் க்ரிக் (Francis Crick) ஆகிய நோபெல் அறிவியல் அறிஞர்களின் DNA,RNA - இவைகளின் மூலக்கூறு கூட்டமைப்பின் (molecular structure) வருகைக்குப் பின், ஓபரின் அவர்களின் கருத்து இன்னும் பரவலாக பேசப்பட்டு, செயற்கையாக உயிரை தோற்றுவிக்க இன்னும் சொற்ப காலம்தான் தேவைப்படும் எனும் கருத்து வலுப்பெறத் தொடங்கியது.
சமீப கண்டிபிடிப்பான சிந்தியா (Synthia) அக்கருத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.
ஆதலினால்...
உயிரின் ஊற்றுக்ககண் தொட்டுவிடும் தூரத்தில்தானா?
அறிவியலின் வளர்ச்சியும், காலமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

1 comment:

saarvaakan said...

வாங்க தோழர்,வாழ்த்துக்கள்
பிறகு வருகிறேன்,நிதானமக் நிறைய விவாதிப்போம்
நன்றி.