Friday, April 2, 2010

பெரு வெடிப்பு அண்டம்



பெரு வெடிப்பு

நம் பிரபஞ்சத்தின் தோற்றமும், பரிணாமமும் குறித்த பல்வேறு கொள்கைகளில் "பெருவெடிப்பு" (Big Bang) கொள்கையே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கை.

அந்தக் கொள்கை என்னதான் சொல்கிறது?

நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சப் பகுதி, 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சொற்ப மில்லி மீட்டர் நீள அகலம் கொண்ட, சிறு துண்டம்தான் என்பதே அக்கொள்கையின் அடிப்படை.

கணக்கிட முடியாத அடர்வும், வெப்பமும் கொண்ட இத்துண்டம், அதன் நிலையிலிருந்து மாறி விஸ்வரூபமாய் வெடித்து, பரந்து விரிந்து கிடக்கும், நாம் வாழும் இந்த உலகத்தை தன்னகம் கொண்ட அண்ட அகிலமாக உருமாறியிருக்கிறது. அந்த அடர்வும், உஷ்ணமும் கொண்ட மிச்ச மீதிகளை நம்மால் இன்றளவும் காண முடிகிறது. அந்த மிச்சங்கள் மிகக்குளிர்ந்த அண்ட சராசர நுண்ணலை கதிர் வீச்சு பின்புலங்களாக (cosmic microwave background radiation) இப்பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன. இக் கதிர் வீச்சு வானம் முழுதும் சீரான வெளிச்ச தகதகப்பாக மிளிர்வதை நுண்ணலை கண்டுபிடிப்பான்களால் (microwave detectors) பார்க்க முடிகிறது.

பெருவெடிப்பு கொள்கையின் அடிப்படைகள்:

1. ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிடி

முதன் முதலாக ஐன்ஸ்டீனின் புதிய புவிஈர்ப்புக் கொள்கை பொதுமை சார்பியல் தேற்றமாக 1916 ல் உருவானது. ஐஸக் நியூட்டனால் 1680 ல் உருவாக்கப்பட்ட புவிஈர்ப்புக் கொள்கையின் பொதுமைப் படுத்தப்பட்ட புதிய கொள்கையே இந்த தேற்றம் என்று கூறலாம். நியூட்டனின் விதி யானது நிலைகொண்டுள்ள பொருளுக்கும் மற்றும் ஒளியைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நகரும் பொருளுக்குமே பொருந்தும். புவிஈர்ப்பு எனப்படுவது புவிஈர்ப்பு 'புலம்' (field) என விவரிக்கப் பட்ட முறையிலிருந்து நீங்கி, அது பெருவெளி (Space) மற்றும் காலம் (Time) இவற்றின் உருமாற்றம்தான் என்று கருதுவதே பொது சார்பியலின் ஆதார கருத்தாக்கமாகும். நியூட்டன் தியரியால் விளங்க முடியாத புதிர்களாய் இருந்த மெர்க்குரி கோளின் பாதையில் காணப்பட்ட விநோதமும், சூரிய ஒளியின் வளைவும் ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிடியால் புதிர் விடுவிக்கப்பட்டு விடை காண முடிந்தது. சமீப காலங்களில் ஐன்ஸ்டினின் தியரி பல கடுமையான சோதனைகளை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

2. தி காஸ்மலாஜிகல் ப்ரின்ஸிபிள்.

ஜெனரல் ரிலேடிவிடி தியரி அறிமுகமான பிறகு ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகள் புதிய புவிஈர்ப்பு எந்திரவியலை ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் ஏற்புடையதாக்க முடியுமா எனற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில்தான் matter எங்கனம் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது என்பது குறித்த ஓர் அநுமானம் (assumption) தேவைப்பட்டது. மிகக் குறைந்த பார்வை வீச்சுடன் (vision) இப்பிரபஞ்சத்தின் உள்ளடக்கத்தை பார்க்கையில் அது எல்லா இடத்திலும், எத்திசையிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் காணப்படும் என்பதே அந்த அநுமானம்.

அதாவது மிகப் பெரிய அளவீட்டு சராசரியில் இப்பிரபஞ்சத்தின் matter சமச்சீராகவும் isotropic ஆகவும் இருக்கிறது. இதைத்தான் "பிரபஞ்சக் கொள்கை" (Cosmological Principle) எனக் கூறப்படுகிறது. பரந்து விரிந்த விண்மீன் மண்டலங்களை (galaxies) கூர்ந்து கண்கானிப்பதன் மூலம் இப் பிரபஞ்சக் கொள்கை அநுமானம் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறது.

வான் வெளியில் 30 degree வீச்சில் இந்த விண்மீன் மண்டலம் ( galaxy ) சீராகப் பரந்து கிடக்கும் காட்சியை மேலுள்ள படத்தில் காணலாம். மேலும் பெருவெடிப்பின் எச்சத்தின் காரணத்தால் பரவிக் கிடக்கும் உஷ்ணம் அதாவது Cosmic Microwave Radiation வான் மண்டலத்தில் ஒரே சீராகப் பரவியுள்ளது என்பதும் விளங்கும். மேலும் இந்த உண்மை, வெகு காலத்திற்கு முன்பு கதிர் வீச்சை உருவாக்கிய வாயு சீராக பகிர்ந்தளிக்கப்பட்டது எனும் கருத்திற்கு ஆதாரம் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

பெருவெடிப்பு கருத்தியலுக்கு இந்த இரு சிந்தனைகளும் ஆதார ஸ்ருதிகளாய் அமைந்துள்ளன. மேலும் கண்கூடாய் தெரியும் பிரபஞ்ச உண்மைகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களை உருவாக்க வழி வகுக்கும் சிந்தனையாகவும் அமைந்துள்ளன.

http://map.gsfc.nasa.gov/

No comments: